ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில் கடந்த 2019, பிப்ரவரி 14-ம் தேதி 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணித்து கொண்டிருந்த போது, அவந்திபோராவில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வீரர்களின் பேருந்து ஒன்றின் மீது மோதியது. இந்த பயங்கர தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் உடல் சிதறி பலியானார்கள். இந்த கோர சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவுற்ற நிலையில், இந்த சம்பவத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரதமர் மோடி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், "கடந்த ஆண்டு நடந்த கொடூரமான புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த துணிச்சலான வீரர்களுக்கு எனது அஞ்சலி. அவர்கள் நம் தேசத்திற்கு சேவை செய்வதற்கும், பாதுகாப்பதற்கும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த போற்றத்தக்க நபர்கள். அவர்களின் தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது" என தெரிவித்துள்ளார்.