
ஊரடங்கு தளர்வுக்குப் பின்னரும் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என மத்திய அரசு குறிப்பாணை வெளியிட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதித்துள்ளன. இந்த நிலையில் மூன்றாவது ஊரடங்கு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு முடிந்த பிறகும் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என மத்திய அரசு குறிப்பாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆணையில், "சமூக இடைவெளி மற்றும் சுமுகமான பணி சூழலைப் பேணுவதற்காக ஊரடங்குக்குப் பின்னரும்கூட இந்த நடைமுறை பின்பற்றப்படும். மேலும் முக்கியத் தகவல்கள், அரசாங்க கோப்புகள் ஆகியவற்றைக் கையாள்வது குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொலைவிலிருந்து பணியாற்றும் போதும் உறுதி செய்யப்படும்.
எதிர்காலத்தில், மத்தியச் செயலகம் தொடர்ந்து மாறுபட்ட வருகைப்பதிவு மற்றும் மாறுபட்ட வேலை நேரங்களில் தொடர்ந்து செயல்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ட்விட்டர் நிறுவனமும் இதே போன்று தங்களது ஊழியர்கள் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னும் நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.