தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (02.05.2021) நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த முடிவுகளின்படி மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, முதலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பிறகு தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இதனால், மம்தா பானர்ஜி முதல்வர் ஆவாரா? என பலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். ஆனால், தேர்தலில் வெல்லமாலே முதல்வர் ஆவதற்கு அரசியல் சட்டத்தில் வாய்ப்பு இருக்கிறது. அந்த விதியின்படி, தேர்தலில் வெற்றி பெறாமல் அல்லது தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அதன்பிறகு ஆறு மாதத்தில் தேர்தலில் நின்று வெல்ல வேண்டும். மம்தாவும் தற்போது முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டு, பின்பு இடைத்தேர்தலில் நின்று வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மம்தாவும் தனது பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 2011ஆம் ஆண்டு முதன்முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றியபோது, மம்தா மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. இருப்பினும் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட அவர், பின்பு பவானிப்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினர் ஆனதோடு, முதல்வர் பதவியையும் தக்கவைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.