இருசக்கர வாகனத்தில் காவல்நிலையத்திற்கு வந்த ஒருவர், கையில் ஒரு சாக்கு மூட்டையை எடுத்து வந்தார். காவல்நிலையத்திற்கு உள்ளே நுழைந்ததும் அங்கு 3 போலீஸ்காரர்கள் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் அந்த சாக்கை அவிழ்த்து, உள்ளே இருந்த கேரிபேக்கை திறந்து, ''இது என் மனைவி தலை சார்'' என்று கூறியிருக்கிறார்.
அதிர்ச்சியடைந்த போலீசார், உள்ளே வை... உள்ளே வை... என்று கூறியதுடன் அதனை அப்படியே ஒரு போலீஸ்கார் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். கர்நாடக மாநிலம் தரிகரே தாலுக்காவில் உள்ள அஜ்ஜம்பூரா காவல்நிலையத்தில்தான் இந்த பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நபரை அமைதிப்படுத்திய போலீசார், பின்னர் விசாரித்துள்ளனர். அப்போது அவர், தரிகரே தாலுகா சிவானி கிராமத்தைச் சேர்ந்த தன்னுடைய பெயர் சதீஷ் என்றும், 35 வயதான தான் வாடகை கார் ஓட்டுநர். தனக்கு 28 வயதில் ரூபா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது என்றும் கூறியிருக்கிறார்.
உங்களுக்குள்ள என்ன பிரச்சனை? ஏன் இந்த மாதிரி செஞ்சீங்க? என போலீசார் கேட்க, நல்லாதான் சார் இருந்தோம். கடந்த இரண்டு வருடங்களாகத்தான் அடிக்கடி கோவமா பேசுவாள். வீட்டில் உள்ள பெரியவர்கள் அறிவுரையெல்லாம் சொல்லுவாங்க.
நாளடைவில் தான் எனக்கு தெரிந்தது சுனில் என்ற ஒரு இளைஞருடன் அவளுக்கு பழக்கம் இருந்தது. இதனை கேள்விப்பட்ட நான் ரூபாவை கண்டித்ததோடு, அவள் மீது பாசத்தையும் காட்டினேன்.
இருப்பினும் அவர்களுடனான தொடர்பு நீண்டது. நான் கேட்டதாக கூறி சிலரிடம் மூன்று லட்சம் பணம் ஏற்பாடு செய்து, அதனை அந்த இளைஞனுக்கு கொடுக்கக் கூட ஏற்பாடு செய்திருக்கிறாள். இதனையும் கேள்விப்பட்ட நான், ரூபாவை கண்டித்தேன்.
இந்த நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூரு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினேன். அப்போது வீட்டில் மனைவி ரூபா அந்த இளைஞருடன் தனிமையில் இருப்பதை பார்த்தேன். என்னால் ஆத்திரம் தாங்க முடியவில்லை. இருவரையும் தாக்கினேன். இதில் அந்த இளைஞன் தப்பி ஓடிவிட்டான்.
ஆனால், ஆத்திரம் தீராத நான், ரூபாவைக் கொலை செய்து, அவளின் தலையைத் துண்டாக வெட்டி எடுத்து, சாக்கு பையில் போட்டு எடுத்து வந்தேன். இருசக்கர வாகனத்தில் 20 கிலோ மீட்டர் வந்திருக்கிறேன்.
அவர்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்தேன் சார். தாங்க முடியல... அதான் சீவிட்டேன்... எனக்கு என்னென்னா அவன் ஓடிட்டான் சார்... அதான் வருத்தமே... என கூறியிருக்கிறார் சதீஷ்.
பின்னர் அங்கிருந்த போலீஸார் சதீஸைக் கைது செய்து, வெட்டப்பட்ட ரூபாவின் தலையுடன் கொலை நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். பின் ரூபாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். சிக்மங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் சதீஸை போலீஸார் ஆஜர்படுத்திய நிலையில், அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.