Skip to main content

பெண் மருத்துவர் கொலை வழக்கு; கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 13/08/2024 | Edited on 13/08/2024
west bengal Female doctor case Calcutta High Court action order

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இதனைப் பார்த்த சக மாணவர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலில் காயங்களுடன், அரை நிர்வாணமாகக் கிடந்த பயிற்சி மருத்துவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பயிற்சி மருத்துவர் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி என்பது தெரியவந்தது. மேலும், இவர் கடந்த 8 ஆம் தேதி (08.08.2024) இரவு நேர பணியில் இருந்துள்ளதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அதோடு பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மருத்துவ மாணவி கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கைத் தலைமை நீதிபதி அமர்வில் சுமார் 4 மணி நேரம் வரை விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நீதிபதி கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்