டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதியில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 27.7.2024 அன்று பெய்த கனமழையின் காரணமாக மத்திய டெல்லியில் உள்ள ராஜிந்தர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ராவ் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் தரை தளத்திற்குள் திடீரென வெள்ளநீர் புகுந்தது. அப்போது தரை தளத்தில் உள்ள நூலகத்தில் குறிப்பெடுத்துக்கொண்டிருந்த பயிற்சி மாணவர்கள் வெள்ள நீரில் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாக மீட்புப்படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த பேரிடர் மீட்புக் குழு வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மாணவர்களை மீட்டனர். பின்பு, அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். நீண்ட நேரம் தொடர்ந்த இந்த மீட்புப் பணியில், சோனி (25), ஸ்ரேயா யாதவ் (25), நெவீன் தல்வின் என 2 மாணவிகளும் ஒரு மாணவரும் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து மாணவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வந்தது. டெல்லி காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், அதனை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக டெல்லி நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதற்கான காரணத்தையும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வெள்ள நீர் தடுப்பு நடவடிக்கை மற்றும் மழைநீர் வடிகால் விவகாரம் போன்றவற்றில் டெல்லி அரசு ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் அதிக அளவில் ஊழல் செய்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம், எனவே இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக விளக்கம் கொடுத்துள்ளது டெல்லி நீதிமன்றம்.