நாடு முழுவதும் 17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமான இன்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "2 கோடி பேருக்கு வேலை இல்லை.வங்கி கணக்கில் 15 இலட்சம் இல்லை. மோடி வாக்களித்த அச்சே தின் வரவே இல்லை. அதற்கு பதிலாக பணமதிப்பிழப்பு, வேதனை மிகுந்த விவசாயிகள், ஜி.எஸ்.டி தான் கிடைத்தன. அவநம்பிக்கை, வன்முறை, வெறுப்பு அரசியல் இவையே இந்த அரசு நமக்கு கொடுத்தவை. இந்தியாவின் எதிர்காலத்துக்காக நீங்கள் இன்று வாக்களிக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
அது போல மோடி இதுபற்றி கூறுகையில், "முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள மக்கள் சாதனை படைக்கும் அளவில் பெரிய எண்ணிக்கையில் வந்து வாக்கினை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக முதல் முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள், அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.