இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவந்த நிலையில், தற்போது தினசரி கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. அதேநேரத்தில் கிராமப்புறங்களில் கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இந்தநிலையில், பிரதமர் மோடி, சமீபத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அம்மாநில - மாவட்ட அதிகாரிகளோடு கரோனா நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதன்தொடர்ச்சியாக, பிரதமர் மோடி இன்று (20.05.2021) கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுகள் மற்றும் கள அதிகாரிகளோடு காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது வருமாறு: “கரோனா வைரஸ் உங்கள் வேலையை மிகத் தேவையானதாகவும் சவாலானதாகவும் ஆக்கியுள்ளது. புதிய சவால்களுக்கு மத்தியில், நமக்குப் புதிய யுக்திகள், தீர்வுகள் தேவை. இதில் உள்ளூர் அனுபவங்களைப் பயன்படுத்துவது முக்கியமானதாகிறது. மேலும், ஒரு நாடாக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உங்களது களப்பணி, உங்களது அனுபவங்கள், உங்களது கருத்துக்கள் ஆகியவை பயனுள்ள கொள்கைகளை உருவாக்க உதவுகிறது. தடுப்பூசி இயக்கதை செயல்படுத்தும் யுக்தியில் கூட மாநிலங்கள் மற்றும் பலர் வழங்கிய பரிந்துரைகளுடன் நாம் முன்னேறி வருகிறோம்.
தடுப்பூசி தொடர்பான 15 நாட்களுக்கான தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சகம், மாநிலங்களுக்கு வழங்கிவருகிறது. தடுப்பூசி விநியோகம், தடுப்பூசி செலுத்தும் நேரத்தை திட்டமிட உங்களுக்கு உதவும். தடுப்பூசி வீணடிக்கப்படும் சிக்கல் இருக்கிறது. தடுப்பூசியின் ஒரு டோஸை வீணாக்கினாலும் ஒரு உயிருக்கான பாதுகாப்பை வழங்க முடியவில்லை என அர்த்தம். தடுப்பூசி வீணாவதைத் தடுக்க வேண்டும்.” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.