Skip to main content

"முடிவெடுப்பது யார் எனத் தெரியவில்லை" - காங்கிரஸ் தலைமையை விமர்சித்த கபில் சிபல்!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

KAPIL SIBAL

 

இந்தியா முழுவதிலும் பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சிகளுக்குள் உட்கட்சி பூசல் தொடர்ந்து வருகிறது. குறிப்பாகப் பஞ்சாபில் தற்போது காங்கிரஸ் கட்சிக்குள்ளான பிரச்சனை உச்சத்தில் உள்ளது. அம்மாநிலத்தின் முதல்வரையே மாற்றியும் கட்சிக்குள் நடைபெற்று வரும் பிரச்சனை தீரவில்லை. 

 

அதேசமயம் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல தலைவர்கள் தொடர்ந்து வேறு வேறு கட்சிகளுக்குத் தாவி வருகின்றனர். காங்கிரஸ் இவ்வாறு பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், காங்கிரஸ் தலைமையின் மேல் அதிருப்தியில் உள்ள ஜி-23 தலைவர்களில் ஒருவருமான கபில் சிபல், காங்கிரஸ் தலைமையைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

செய்தியாளர்களைச் சந்தித்த கபில் சிபல் பேசுகையில், " காங்கிரசில் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இல்லை. யார் முடிவுகளை எடுக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் ஜி -23. நிச்சயமாக ஜி ஹுஸூர் -23 அல்ல. நாங்கள் தொடர்ந்து பிரச்சினைகளை எழுப்புவோம். மக்கள் ஏன் காங்கிரஸை வெளியேறுகிறார்கள்? ஒருவேளை அது நம் தவறா என்று பார்க்க வேண்டும். நாம் உடனடியாக ஒரு காரிய கமிட்டி கூட்டத்தைக் கூட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு விவாதமாவது நடைபெறும். நாங்கள் கட்சியின் சித்தாந்தத்தை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டோம். முரண்பாடு என்னவென்றால் காங்கிரசின் தலைமைக்கு நெருக்கமானவர்கள் வெளியேறிவிட்டார்கள். தலைமைக்கு நெருக்கமானவர்கள் இல்லை என்று நினைப்பவர்கள் இன்னும் கட்சியில் இருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் ஊடகங்களைச் சந்திப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும், இருப்பினும் தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் கூறிய கபில் சிபல், பஞ்சாப் காங்கிரஸார் ஒற்றுமையாக இருப்பதைக் காங்கிரஸ் மேலிடம் உறுதி செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார். பஞ்சாப் பிரச்சனை குறித்து அவர், "நான் பஞ்சாப் பற்றிப் பேச விரும்பவில்லை ஆனால் எல்லையிலுள்ள மாநில காங்கிரஸில் இவ்வாறு நடக்கிறது என்றால் என்ன அர்த்தம்?. இது ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தானுக்குச் சாதகமாகும். பஞ்சாபின் வரலாறு மற்றும் அங்குத் தீவிரவாதத்தின் எழுச்சி குறித்து நமக்குத் தெரியும். நிச்சயமற்ற நிலையை உருவாக்க எல்லை தாண்டிய சக்திகள் எவ்வாறு தற்போதைய சூழலைப் பயன்படுத்துகிறது என்பதும் நமக்குத் தெரியும். இந்த சக்திகள்தான் தேசத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். பஞ்சாப் காங்கிரஸார் ஒற்றுமையாக இருப்பதைக் காங்கிரஸ் தலைமை உறுதி செய்ய வேண்டும். யாருக்காவது பிரச்சனை இருந்தால், அது விவாதிக்கப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்