இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் 75 இடங்களில் சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் 'தியாகப் பெருஞ்சுவர்' அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை எதிரே அமைக்கப்பட்டுள்ள தியாகப் பெருஞ்சுவரில் பல்வேறு சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவர்க்கர் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகையினை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், சபாநாயகர் செல்வம் ஆகியோர் தியாக பெருஞ்சுவரில் பொருத்தினர்.
இந்நிலையில் சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்திற்கு எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை. அவர் சிறையில் இருந்த போது ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர். அதோடு மட்டுமல்லாமல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வெள்ளை ஏகாதிபத்திதத்திற்கு எதிராகப் போராட படை கட்டிய போது சாவர்க்கர் 'இப்படையில் இந்துக்கள் யாரும் சேர வேண்டாம்' எனக் கூறி நேதாஜி படைக்கு எதிராக படை கட்டியவர். காந்தி படுகொலைக்குக் காரணமாக இருந்தவர். இப்படிச் சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டுத் துரோகம் இழைத்த சாவர்க்கர் பெயரைத் தியாகிகளின் பட்டியலில் சேர்த்து தியாகப் பெருஞ்சுவரில் பெயர்ப் பலகைத் திறந்திருப்பது கண்டனத்திற்குரியது என பொதுநல அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அதையடுத்து புதுச்சேரியிலுள்ள பல்வேறு கட்சி, சமூக அமைப்புகளின் சார்பில் இன்று காலை சின்னக்கடை மணிக்கூண்டு அருகே ஒன்றுகூடி 75ஆவது சுதந்திர தினத் தியாகப் பெருஞ்சுவரில் உள்ள சாவர்க்கர் பெயர்ப் பலகையை அகற்ற ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் அருகே வந்த போது, போலீசார் தடுப்புகளை போட்டு தடுத்து நிறுத்தினர். ஆனால் தடுப்புகளை மீறி முற்றுகையிட முயன்றும் சாவர்க்கர், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோரின் உருவப்படத்தை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இப்போராட்டத்திற்கு தமிழர் களம் செயலாளர் கோ.அழகர் தலைமை தாங்கினார். போராட்டத்தில் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீர.மோகன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மண்டல தலைவர் ப.அப்துல்லாஹ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.