போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் தயாராகும் கங்கை விரைவுச்சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (18/12/2021) அடிக்கல் நாட்டினார்.
கங்கை விரைவுச்சாலை மீரட் மற்றும் பிரயக்ராஜ் உட்பட மாநிலத்தின் 12 மாவட்டங்களை இணைக்கும் 594 கி.மீ. நீளம் கொண்ட அதிவேக விரைவுச்சாலை. 594 கி.மீ. நீள ஆறு வழி கங்கா விரைவுச்சாலை 36,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் நிறைவடையும் போது உத்தரப்பிரதேசத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களை இணைக்கின்ற மாநிலத்தின் மிக நீண்ட விரைவுப் பாதையாக இது இருக்கும்.
ஷாஜஹான்பூர் விரைவுச்சாலையில் அவசரமாக விமானம் புறப்படவும், விமானப்படை விமானங்கள் தரையிறங்கவும் 3.5 கி.மீ. நீளம் கொண்ட ஓடுபாதை அமைக்கப்பட உள்ளது.
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கங்கை விரைவுச்சாலை மூலம் புதிய தொழிற்சாலைகள் உத்தரப்பிரதேசத்திற்கு வரும். முன்பு இருந்தவர்கள் காகித அளவிலேயே திட்டங்களைக் கொண்டு வந்தனர். உங்கள் பணத்தைக் கொண்டு தங்கள் கஜானாக்களை நிரப்பிக் கொண்டனர். உத்தரப்பிரதேசத்தில் 30 லட்சத்துக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு அரசி வீடுகளை வழங்கவுள்ளது. உத்தரப்பிரதேசம் வளர்ச்சியடையும் போது நாடு முன்னேறும்; எனவே தான் அரசின் கவனம் உத்தரப்பிரதேச மாநில வளர்ச்சியில் உள்ளது. சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக ஏழைக்காக உழைக்கும் அரசு உருவாகியுள்ளது" என்றார்.
இந்த விழாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.