மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் இப்போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கிசான் மகாபஞ்சாயத்தில் உரையாற்றினார். அப்போது, மோடி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுவிட்டு விவசாயிகளிடம் பேசட்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், "நாங்கள் விவசாயிகளுடன் பேச விரும்புகிறோம் என்று மோடி கூறுகிறார். நீங்கள் எதைப் பற்றி பேச விரும்புகிறீர்கள்? (வேளாண்) சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள். விவசாயிகள் உங்களுடன் பேசுவார்கள். நீங்கள் அவர்களின் நிலத்தையும், எதிர்காலத்தையும் பறித்துவிட்டு, அவர்களோடு பேச விரும்புகிறீர்கள். முதலில் சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள். பின்னர் பேசுங்கள்" எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், "வேளாண் சட்டங்கள் விவசாயிகளை மட்டும் பாதிக்காது. விவசாயத் தொழிலில் ஈடுபடும் 40 சதவீத இந்தியர்களைத் தாக்கும். பிரதமர் மோடி சீனாவிற்கு எதிராக நிற்கமாட்டார். ஆனால் விவசாயிகளை அச்சுறுத்துவார்" எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.