கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி துண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன் காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன. இதனைத் தொடர்ந்து ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டம் வெடித்தது. இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் குவிந்தன.
அதனைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு ஒன்றில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடந்த 15 ஆம் தேதி 'ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தின்படி அத்தியாவசியமானது அல்ல. ஹிஜாப் அணிய கல்வி நிறுவனங்கள் விதித்த தடை செல்லும்' எனத் தீர்ப்பளித்தனர். இப்படிப்பட்ட சூழலில் கர்நாடகாவில் இன்று முதல் ஏப்ரல் 11 ஆம் தேதி வரை 10 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் இன்று நடைபெற்ற தேர்வில் 8.84 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். ஆனால் இந்த தேர்வில் 20,994 மாணவிகள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த தகவலை அம்மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் மறுத்துள்ளார். ''99.99 சதவீதம் மாணவிகள் ஹிஜாப் இல்லாமல் தேர்வெழுதினர். நான்கு மாணவிகள் மட்டுமே தேர்வெழுதாமல் வெளியேறினர்'' என அவர் தெரிவித்துள்ளார்.