மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி 2005 முதல் 2017 ஆம் ஆண்டுவரை மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டார். மீண்டும் அவரை உறுப்பினராக்க மேற்கு வங்க சிபிஎம் விரும்பியது. காங்கிரஸும் ஆதரவளிக்க முன்வந்தது. ஆனால், பிரகாஷ் காரத் கோஷ்டி இதை எதிர்த்தது. ஒருவர் இருமுறைக்கு மேல் ஒரு பதவியில் இருக்கக் கூடாது என்பதை சிபிஎம் கண்டிப்பாக பின்பற்றுவதை காரணமாக காட்டி யெச்சூரிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்கு வங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் நிறைவுபெறுகிறது. எனவே, மீண்டும் யெச்சூரியை மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் குரலை ஒருங்கிணைத்து ஒலிக்க அவர் எம்.பி.யாக வேண்டும் என்று கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் மேற்கு வங்க உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.
கட்சி உறுப்பினர்களின் பொதுவான உணர்வை மத்தியக்குழு கூட்டத்தில் பிரதிபலித்ததாக மேற்கு வங்க சட்டமன்ற கட்சித்தலைவர் சுஜன் சக்ரவர்த்தி தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் எழுப்பிய பிரச்சனை குறித்து மேற்கொண்டு விவாதம் நடைபெறவில்லை என்று தெரிகிறது.
ஆனால், திறமையின் அடிப்படையிலும் அனுபவத்தின் அடிப்படையிலும் மூத்த உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அவையில் புதிய உறுப்பினர்களுக்கு வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதே சிபிஎம் உறுப்பினர்களின் பெரும்பான்மைக் கருத்தாக இருக்கிறது.