ரூ. 9,000 கோடி அளவிற்கு வங்கிகளிடமிருந்து கடனாக வாங்கி, அதனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டு இலண்டனுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையாவின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இதனை கடன் கொடுத்த வங்கிகளிடம் தருவதில் எவ்வித தடையும் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை வங்கிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி, எஸ்பிஐ தலைமையிலான வங்கி கூட்டமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறை, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வங்கிகள் கூட்டமைப்பிடம் ஒப்படைப்பதில் எவ்வித தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
ஆனால், வங்கிகளுக்கு விஜய் மல்லையா எவ்வளவு கடன் தொகையை திருப்பி அளிக்க வேண்டும் என்ற விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மேலும் கடன் தந்த வங்கிகளில் ஒன்றைத் தவிர மற்ற வங்கிகள் அனைத்தும் பொதுத்துறை வங்கிகள் என்பதால் பதில் தர வேண்டிய பொறுப்பு வங்கிகளுக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பொதுமக்களின் நலன் கருதி இதை வெளியிட வேண்டும் என்றும் அந்த பதில் மனுவில் அமலாக்கத்துறை குறிப்பிட்டிருப்பது கவனித்தக்கது.