சமூக செயற்பாட்டாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் படுகொலை சம்பவங்களுக்கு பொதுவான காரணங்கள் எதுவும் உள்ளதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சமூக செயற்பாட்டாளரான நரேந்திர தபோல்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான கோவிந்த பன்சாரே 2015 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அதே ஆண்டு கர்நாடக மாநிலத்தில் வைத்து மற்றுமொரு சமூக செயற்பாட்டாளரான கல்புர்கியும் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். முற்போக்கு சிந்தனையாளர்களான இவர்கள் நான்கு பேரும் தொடர்ந்து இந்துத்துவா அமைப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்துவந்தனர். இந்த நிலையில் தான் இவர் நான்கு பேரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டது, இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நான்கு கொலைகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே நரேந்திர தபோல்கரின் கொலையைக் கடந்த 2014 ஆம் ஆண்டியிலிருந்து விசாரித்து வரும் சிபிஐயால், இது நாள் வரை குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இந்த வழக்கின் விசாரணையை மேற்பார்வை செய்ய முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறிவிட்டது. இதனை எதிர்த்து நரேந்திர தபோல்கரின் மகள் முக்தா தபோல்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய நான்கு பேரின் கொலையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று முக்தா தபோல்கர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இந்த நான்கு பேரும் கொலை செய்யப்பட்டதற்கு பொதுவான காரணம் எதுவும் உள்ளதா என்று சிபிஐக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். அத்தோடு இரண்டு வாரக் காலத்திற்கு வழக்கின் விசாரணையைத் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.