கடந்த 2007- ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்நிலையில் வழக்கு தொடர்பான விசாரணை நேற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் விசாரணைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதிட்டனர். இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தரப்பில், முன்ஜாமீன் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் விசாரிக்கிறது. டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டு வரும் நிலையில், நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரம் இல்லத்தில் லுக் அவுட் நோட்டீஸை ஓட்டினர்.
அதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் இன்று காலை 08.00 மணி முதல் அவரது டெல்லி இல்லத்தில் ப.சிதம்பரத்திற்காக காத்திருந்தனர். உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்தை கைது செய்ய எந்தவித தடையும் விதிக்கவில்லை. இதனால் அவரை கைது செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், ப.சிதம்பரத்தின் வீட்டில் இருந்து சிபிஐ அதிகாரிகள் திரும்பி சென்றனர். மேலும் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விசாரணைக்கு வர வாய்ப்பு இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ப.சிதம்பரம் சிபிஐ அலுவலகத்தில் விரைவில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.