இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா பெண்களுக்கு எதிரான கொடுமைகளை அரங்கேற்றும் நாடாக மாறிவிட்டது. ஆனால் பிரதமர் உடற்பயிற்சி வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார் என ட்விட்டரில் மோடியை விமர்சித்துள்ளார்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளில் பெண்களின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஐநாவில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் 550 வல்லுநர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொருளாதார சுதந்திரம், பாதுகாப்பு, பாரம்பரிய நடைமுறைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அதற்கான இறுதி அறிக்கை ஒன்று சமர்பித்துள்ளது.
அதில் இந்தியா தான் உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. பாலியல் வன்கொடுமை, பெண் அடிமைத்தனம் என இந்தியாவில் பெண்கள் பலவகையில் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், அடிமைத்தனம் போன்றவற்றில் ஆப்கானிஸ்தான், சிரியா,சவூதி போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா முன் நிற்கிறது ஆனால் நம் பிரதமரோ தோட்டத்தில் உடற்பயிற்சி வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார். என்ன ஒரு அவலம் என இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.