இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் 75 வந்தே பாரத் விரைவு ரயிலை இயக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி மத்தியப் பிரதேச மாநிலத்தில், நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கான 5 வந்தே பாரத் விரைவு ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், இன்று காலை போபால் ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையம் நோக்கி வந்தே பாரத் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, போபால் அருகே குர்வாய் கெத்தோரா ரயில் நிலையம் அருகே சென்றபோது ரயில் என்ஜினில் கீழே இருந்த மின்கலன் பெட்டியில் ஏற்பட்ட பிரச்சனையால் திடீரென தீப்பிடித்தது. உடனடியாக வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டு ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரயிலில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மேலும், மற்ற பெட்டிகளுக்குச் செல்லும் மின் இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. இதனால், ரயில் முழுவதுமாக எரிந்து விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், இந்த வந்தே பாரத் ரயிலின் சி-14 பெட்டியின் பேட்டரியில் தீ ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்து காரணமாகப் பயணிகளின் உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தற்போது தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களின் பெட்டிகளில் கசிவு ஏற்படுவதைத் தடுக்க ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலை வடிவமைப்பு வந்தே பாரத் ரயிலில் சிறிய மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளது.