தெலுங்கு நடிகரும் திரை விமர்சகருமான கத்தி மகேஷ் மீது ராமனை விமர்சித்ததாகவும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் இந்துத்துவ அமைப்புகளால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் காவல்நிலையங்களில் புகார் தரப்பட்டுள்ளது.
கத்தி மகேஷ் டி.வி. விவாத நிகழ்ச்சியொன்றின்போது, “என்னைப் பொறுத்தவரையில் ராமாயணம் ஒரு கற்பனைக் கதை. ராமன் சிறப்பான கதாபாத்திரமாக இருக்கலாம். என்னளவில் ராமன் ஒரு முட்டாள் என்றே நினைக்கிறேன். சீதா ராவணனுடனே தங்கியிருந்தால் அது சரியான முடிவாக இருந்திருக்கும்” என தெரிவித்தார். இதையடுத்து விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள், ஹிந்து வாகினி, பிராமண இளைஞர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவ அமைப்புகள் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் அவர்மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் கொடுத்துள்ளன. பன்சாரா ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷன் அவர்மீது ஐ.பி.சி 295, 505 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்துள்ளது.
“எதைப்பற்றியும் பேசுவற்கு பேச்சுரிமை இருக்கிறது. விவாதத்தின் ஒரு தரப்பாக எனது கருத்தைச் சொன்னேன்” எனச் சொல்லும் கத்தி மகேஷுக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்புகளும், அவரது நண்பர்களுக்கும் ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர்.