அமைச்சர் பொறுப்பேற்றதற்கு பிறகு முதன்முறையாக வட மாநிலத்திற்கு சென்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஒடிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் துறையின் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றிருக்கிறார்கள்.
ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வர் நகரத்தின் அருகே உள்ள இஷநேஸ்வர் பிஜு ஆதர்ஷ் காலனியில், ஜகா மிஷன் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பணிகளை உதயநிதி பார்வையிட்டார். அவருக்கு ஒடிசா மாநில அரசு அதிகாரிகளும், ஒடிசா மக்களும் பிரமிப்பான வரவேற்பு தந்து அசத்தினார்கள். குடிநீர் திட்டப் பணிகள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் உதயநிதிக்கு ஒடிசா மாநில அதிகாரிகள் விவரித்துக் கூறினர். திட்டங்கள் குறித்த சில சந்தேகங்களை உதயநிதி கேட்க, அது குறித்த தெளிவான விளக்கங்களையும் அரசு அதிகாரிகள் விவரித்திருக்கிறார்கள் .
இந்த பயணத்தைத் தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், ஒடிசா மாநில விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கும் இடையே சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.