தொழிலாளர் சட்டங்களை நீக்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட ஏழு தலைவர்கள் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
கரோனா ஊரடங்குக்குப் பிறகு தொழில்துறை முதலீட்டை உயர்த்தவும், மாநிலத்தில் உள்ள சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பி வந்துள்ள ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு, உத்தரப்பிரதேச மாநிலம் அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தொழிலாளர் சட்டங்களைத் தளர்த்தியுள்ளது. அதன்படி அரசாங்கம் அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி வசதிகளுக்கும், மாநிலத்திற்கு வரும் புதிய முதலீடுகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் தொழிலாளர் நலனுக்காக உருவாக்கப்பட்ட 38 சட்டங்களில் 35 சட்டங்களை நீக்குவதற்கு அம்மாநில அரசு தற்போது முடிவெடுத்துள்ளது. ஆனால் தொழிலாளர்களின் நலனுக்கு கேடு விளைவிக்கக்கூடியதாகக் கருதப்படும் இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, டி ராஜா, சிபிஐ பொதுச் செயலாளர், தீபங்கர் பட்டாச்சார்யா, பொதுச் செயலாளர், சிபிஐ (எம்எல்) -எல், ஏ.ஐ.எஃப்.பியின் பொதுச் செயலாளர் டெபப்ரதா பிஸ்வாஸ், ஆர்.எஸ்.பி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, ஆர்.ஜே.டி பொதுச் செயலாளர் மனோஜ் ஜா மற்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில், "தேசிய அளவிலான ஊரடங்கால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் காரணமாகப் பொருளாதாரத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்ற போலிக்காரணத்தின் கீழ் தொழிலாளர் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது. அப்படிப் பார்த்தல் கரோனா பரவலுக்கு முன்னரே இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிதான் பயணித்தது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் பசியைப் போக்கவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஊரடங்கு காரணமாக நாடு முற்றுவதும் பதினான்கு கோடி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தொழிலாளர் சட்டங்களை இடைநிறுத்துவது என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையையும் அச்சுறுத்தும் விதமாக உள்ளது. இந்திய அரசியலமைப்பின் கீழ் உள்ள தொழிலாளர்கள், அடிமைகள் அல்ல. அவர்களை இந்த நிலைக்குக் குறைப்பது என்பது அரசியலமைப்பு மீறல் மட்டுமல்லாமல், அரசியலமைப்பையே அவமதிக்கும் செயலாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.