பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு குறைந்துவரும் சூழலில், இதற்கான தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவிவருகிறது. மேலும், இந்தத் தடுப்பூசியை மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதனை மக்களுக்கு இலவசமாக வழங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கும் என பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு மாநில அரசுகளும் இந்தத் தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்குவது குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஜெய் பிரதாப் சிங், பொதுமக்கள் அனைவருக்கும் மார்ச் மாதம் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும் இலவசமாகப் போடப்படும் என அறிவித்துள்ளார்.