நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
இந்தத் தேர்தலில் முக்கிய திருப்பமாகத் தெலுங்கு தேசம் கட்சியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இருக்கிறது. ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.
இருப்பினும், பா.ஜ.கவின் கோட்டையாக இருக்கக்கூடிய உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் கூட காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதனால், மகாராஷ்டிராவில் பா.ஜ.கவிற்கு ஏற்பட்ட தோல்வியால் மகாராஷ்டிரா துணை முதல்வராக உள்ள பா.ஜ.கவின் மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் எனத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், சிவசேனா(உத்தவ் தாக்கரே) கட்சி மூத்த தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நரேந்திர மோடி பதவியேற்கட்டும், இனிப்புகளை வினியோகிக்க பரிந்துரைப்போம். ஆனால், இந்த அரசு நீண்ட காலம் நீடிக்காது. பட்னாவிஸ் ராஜினாமா செய்ய முன்வந்தது யோகிக்கு அழுத்தம் கொடுக்கும் படியாகும். மகாராஷ்டிராவில் ஃபட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட்டால், உத்தரபிரதேசத்தில் யோகியின் தலைமையில் தோற்கடிக்கப்படும். அதனால்தான் ராஜினாமா பற்றி ஃபட்னாவிஸ் பேசுகிறார். அரசியலில் இது போன்ற வித்தை சகஜம். மஹாராஷ்டிரா, ஃபட்னாவிஸின் தலைமையை நிராகரித்தது. மகாராஷ்டிர அரசியலின் வில்லன் தேவேந்திர ஃபட்னாவிஸ் தான். அவரால் மகாராஷ்டிராவில் பா.ஜ.கவுக்கு மோசமான கதி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் அரசியல் கலாச்சாரத்தை விஷமாக்கி அதற்கு அவர் இப்போது பணம் கொடுக்கிறார்” என்று கூறினார்.