கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்கள் மூடப்பட்டு வருகின்றன.

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 7,171 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 131 பேரைப் பாதித்துள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்கள் மூடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மார்ச் 31 வரை டெல்லி குதுப்மினார் மற்றும் செங்கோட்டையை பார்வையிடச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக தாஜ்மஹாலும் மூடப்பட்டுள்ளது. மேலும், பாண்டிச்சேரி மாத்தூர் மந்திர், கலாச்சார கூடம் மற்றும் ஆரோவில் கல்வி நிறுவனங்கள் ஆகியவையும் மூடப்படுவதாக ஆரோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் பல்வேறு சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன.