பிறந்த 20 நாட்களே ஆன இரட்டை குழந்தைகளை நீரில் மூழ்கடித்து தாய்-தந்தையே கொன்ற சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் வசீம், நசீமா தம்பதிகள். கூலித்தொழில் செய்துவரும் இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்தநிலையில் தனது குழந்தைகளை காணவில்லை எனவும், இரவு நேரத்தில் யாரோ திருடிசென்றுவிட்டனர் எனவும் இந்த தம்பதிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். புகாரை பதிவு செய்த காவல்துறையினர், அந்த தம்பதிகளின் வீட்டின் அருகே சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவரது வீட்டின் அருகே, இரண்டு குழந்தைகளும் இறந்து மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அந்த உடல்கள் இவர்களது குழந்தைதான் என உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அந்த தம்பதிகளிடம் நடத்திய விசாரணையில், இரண்டுமே பெண்குழந்தையாக பிறந்ததால் கணவன்,மனைவி இருவரும் இணைந்து குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொன்றதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவர் மீதும் வழக்குபதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.