தமிழில் ஒளிபரப்பாகிவந்த பிக்பாஸ் சீசன் 3 சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் முகேன் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் இதே பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிவருகிறார். பல கலாச்சார சீர்கேடான விஷயங்களை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டுவதாக தொடர்ந்து பல புகார்கள் எழுந்துவந்து நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க கோரி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குஜ்ஜார் எழுதியுள்ள அந்த கடிதத்தில், "ஆபாசமான மற்றும் மோசமான செயல்களை ஊக்குவிப்பதாக இந்த நிகழ்ச்சி உள்ளது. குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்து பார்க்க தகுதியற்ற ஒரு நிகழ்ச்சியாக இது உள்ளது. படுக்கையை பகிர்ந்துகொள்வது போன்ற மிகமோசமான விஷயங்கள் காட்டப்படுகிறது. குடும்பத்தினரோடு அமர்ந்து பார்க்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் இந்த மாதிரியான காட்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. நேரடியான ஆபாச காட்சிகள் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
தமிழை விட அதிக ரசிகர்களை கொண்ட ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி 13 சீசன்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இதற்கு தடை விதிக்க கோரி மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது, அந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் பலரும் தங்கள் சமூகவலைதள பக்கத்தில் இந்த கடிதத்திற்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.