உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாஃபர் நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியை ஒருவர், தனது வகுப்பில் பயிலும் குழந்தைகளில் ஒரு இஸ்லாமிய மாணவரை அடிக்கும்படி, சக மாணவர்களுக்குச் சொல்லி அடிக்க வைத்துள்ளார். அதுமட்டுமின்றி சிறுவனுடைய இஸ்லாமிய மதத்தைக் குறிப்பிட்டு, “முகமதிய குழந்தைகள்” என இழிவாகப் பேசியுள்ளார். சிறுவன் பெருக்கல் அட்டவணை கணக்கை தவறாக எழுதியதால் இவ்வாறு கடுமையாக நடந்துள்ளார்.
இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் வியாழக்கிழமை அன்று மன்சூர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குப்பாபூர் என்ற கிராமத்தில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இச்செயலில் ஈடுபட்ட ஆசிரியை திரிப்தா தியாகி மற்றும் அவருக்குச் சொந்தமான நேஹா பப்ளிக் பள்ளியில் சம்பவம் நடந்தது குறித்து காவல்துறை மற்றும் கல்வி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ட்விட்டரில் வைரலாகி வரும் வீடியோவில் ஆசிரியை, இஸ்லாமிய மாணவனை நோக்கி, “இந்த முஸ்லிம் குழந்தைகள் அனைவரும், எந்தப் பகுதிக்காவது செல்லுங்கள்” என ஆசிரியை திரிப்தா தியாகி சொல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், மாணவனை அறைந்துவிட்டு உட்கார்ந்த இன்னொரு மாணவனை பார்த்து ஆசிரியை திரிப்தா தியாகி, “ஏன் இவ்வளவு லேசாக அடிக்கிற? அவனை கடுமையாக அடி” என்றும் கூறியுள்ளார். பிற மாணவர்களிடம் அடுத்து யாருடைய முறை எனவும் கேட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. மேலும், இதற்குப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து முசாஃபர் நகர் காவல் கண்காணிப்பாளர் சத்யநாராயண் பிரஜாபத் ட்விட்டரில் கூறியதாவது; பெண் ஆசிரியர் ஒருவர், பெருக்கல் அட்டவணையை கற்காததால் குழந்தையை அடிக்கும்படி மாணவர்களை மிரட்டும் வீடியோ காட்சி ஒன்று மன்சூர்பூர் காவல் நிலையத்திற்கு கிடைத்தது. அதில் சில ஆட்சேபனைக்குரிய கருத்துகளும் இருந்தன. போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, இஸ்லாமிய மாணவர்களின் தாய்மார்கள் குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்தாததால் அவர்கள் படிப்பில் பாழாய் போவதாக அந்த ஆசிரியை சொல்வதாகத் தெரியவந்தது. இதுகுறித்து கல்வி அலுவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இது பற்றி கட்டௌலி வட்ட அதிகாரி டாக்டர். ரவிசங்கரும் பெற்றோரிடம் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் என் குழந்தையை மீண்டும் அந்தப் பள்ளிக்கு அனுப்பமாட்டேன். செலுத்திய பள்ளிக் கட்டணத்தை நிர்வாகம் திருப்பித் தருவார்கள். புகார் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது எனத் தீர்வு எட்டப்பட்டுள்ளது. அந்த ஆசிரியர் குழந்தைகளுக்கு இடையே பகையை உருவாக்கியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்; “அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து, பள்ளி போன்ற புனிதமான இடத்தை வெறுப்பின் சந்தையாக மாற்றுவது - ஒரு ஆசிரியரால் இதைவிட மோசமான காரியத்தை நாட்டிற்கு செய்ய முடியாது.
இதே மண்ணெண்ணெய்யை வைத்துதான் பாஜகவினர் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தீ வைத்துள்ளனர். குழந்தைகள் தான் இந்தியாவின் எதிர்காலம் - நாம் அனைவரும் அவர்களுக்கு அன்பைக் கற்பிக்க வேண்டும்; வெறுப்பை அல்ல” என்று தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “எப்படிப்பட்ட வகுப்பறையினை, எப்படிப்பட்ட சமுதாயத்தை நமது வருங்கால சந்ததியினருக்கு அளிக்க விரும்புகிறோம்?” என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.