![yogi adityanath](http://image.nakkheeran.in/cdn/farfuture/AGRnJj3X25bjy4Ikq9YhkGu6UHTfhKgHHRLBRw8M8vE/1618386577/sites/default/files/inline-images/fdfdf_7.jpg)
இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்கள் பல்வேறு கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. மஹாராஷ்ட்ரா மாநிலம், 15 நாட்கள் பொது முடக்கத்தை அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்திலும் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில், 18 ஆயிரத்து 21 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு இன்று (14.04.2021) கரோனா உறுதியாகியிருந்தது. இந்தநிலையில், தற்போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கரோனா உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே யோகி ஆதித்யநாத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யோகி ஆதித்யநாத் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.