நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் நான்கு கட்டமாக 381 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் ஐந்தாம் கட்டமாக வாக்குப்பதிவு இன்று (20-05-24) நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அந்தப் பதிவில், “என் அன்பான நாட்டு மக்களே, ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டுமானால் வாக்களிக்க வேண்டும். இ.வி.எம்மில் உள்ள பட்டனை அழுத்தும் முன், அன்புக்கும் சகோதரத்துவத்துக்கும் வாக்களிக்க வேண்டுமே தவிர வெறுப்புக்காக அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே தவிர ஒரு சில முதலாளிகளை பணக்காரர்களாக ஆக்குவதற்காக அல்ல.
நமது உரிமைகளைப் பறிப்பவர்களுக்கு வாக்களிக்காமல், நமது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வாக்களிக்க வேண்டும். நாம் நீதிக்காக வாக்களிக்க வேண்டும், அநீதிக்கும் அடக்குமுறைக்கும் அல்ல. நாம் ஜனநாயகத்திற்காக வாக்களிக்க வேண்டும் என்பதே தவிர சர்வாதிகாரத்திற்காக அல்ல. 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் என 49 மக்களவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் இன்று வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துகின்றனர். இளைஞர் நீதி, பெண்கள் நீதி, உழவர் நீதி, தொழிலாளர் நீதி மற்றும் பங்கு நீதி என்ற நிகழ்ச்சி நிரலில் வாக்களிக்கப்பட வேண்டும்.
இ.வி.எம்மில் பட்டனை அழுத்தினால், சர்வாதிகாரத்தின் நாற்காலியில் இன்னொரு தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஜனநாயகம் வலுப்பெறும். முதன்முறையாக வாக்களிக்கும் எனது இளம் நண்பர்களை வரவேற்கிறேன். இதில் அவர்களுக்கு வரலாற்றுப் பொறுப்பு உள்ளது. நான்கு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களின் போக்குகள் பா.ஜ.க அரசு விலகுவது உறுதியாக இருப்பதைக் குறிக்கிறது. இன்று நடைபெறுவது அவர்கள் புறப்படுவதற்கான ஐந்தாவது படி. ஜூன் 4 முதல் புதிய தொடக்கம் ஏற்படும். ஏனென்றால் நிலைமை மாறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.