மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் முடிவடையும் நிலையில் பிரதமர் மோடி முதன்முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
![rahul gandhi and narendra modi press meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/IqxSfsnUqS_U_qFGXLjAnKqWkop3ewpRVKHXEphMxTo/1558096263/sites/default/files/inline-images/RAHUL-Gandhi-Modi-graphic-std_5.jpg)
அப்போது பேசிய அவர், "திருவிழா மற்றும் கிரிக்கெட் போல தேர்தலும் ஒரு பண்டிகையாகவே நடந்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி நடத்திய நாங்கள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம்" என மோடி கூறினார்.
இந்த நிலையில், மோடியின் இந்த பேட்டியை வேறொரு இடத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்த ராகுல் காந்தி நேரலையில் பார்த்து செய்தியாளர்களிடம் உடனுக்குடன் விமர்சனம் செய்து வந்தார். அப்போது பேசிய அவர், மோடி கடைசியாக செய்தியாளர்களை சந்தித்துவிட்டார் என கூறி ஆரவாரம் செய்தார்.
மேலும் பேசுகையில், "எனது குடும்பத்தை பற்றி பிரதமர் மோடி விமர்சித்ததற்கு நான் கவலைப்படவில்லை. ஆனால் நான் ஒரு காலத்திலும் மோடியின் பெற்றோரை குறிவைத்து பேச மாட்டேன். பிரதமர் மோடிக்கும், அவரது பெற்றோருக்கும் நான் மரியாதை கொடுக்கிறேன். தான் தூய்மையானவன், நேர்மையானவன் என்று மோடி கூறிவந்த நிலையில் அவரது சுயரூபம் மக்களுக்கு தெரிந்துவிட்டது. மேலும் ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக செய்தியாளர்களை மோடி சந்திப்பது ஆச்சர்யத்தை தருகிறது" என்று கூறினார்.