சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் சி57ல் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது.
அதனைத் தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “புவி சுற்று வட்டப் பாதையில் ஆதித்யா விண்கலம் நிலை நிறுத்தப்பட்டது. சரியாக 648 கி.மீ. உயரத்தில் ராக்கெட்டில் இருந்து ஆதித்யா விண்கலம் தனியாகப் பிரிந்தது. ஆதித்யா எல்-1 விண்கலம் சரியான சுற்று வட்டப் பாதையில் செல்கிறது. அடுத்தடுத்த சுற்றுகளைக் கடந்து மிக நீண்ட தூரப் பயணத்திற்குப் பின் எல்-1 புள்ளியை அடையும்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோவுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், “சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு, இந்தியா தனது விண்வெளிப் பயணத்தைத் தொடர்கிறது.
இந்தியாவின் முதல் சோலார் மிஷன், ஆதித்யா எல்-1ன் வெற்றிகரமான ஏவுதலுக்காக நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
முழு மனித குலத்தின் நலனுக்காகப் பிரபஞ்சத்தைப் பற்றிய சிறந்த புரிதலை வளர்ப்பதற்காக நமது அயராத அறிவியல் முயற்சிகள் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.