Skip to main content

‘மீண்டும் ஒற்றுமை பயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி’ - மல்லிகார்ஜுன கார்கே தகவல்

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
 Rahul Gandhi will start bharat jodo yatra again Mallikarjuna Karke information

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய 'இந்திய ஒற்றுமை பயணம்' 135 நாட்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,750 கிலோமீட்டர் கடந்து ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. இந்திய ஒற்றுமை பயணத்தின் தொடக்க விழாவில் ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியைக் கொடுத்து இந்திய ஒற்றுமை பயணத்தைத் தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "இந்தியாவின் மிகப் பழமையான கட்சி நாட்டை அடக்குமுறையிலிருந்து விடுவிக்கும் கடினமான பணியில் இறங்கியிருக்கிறது. நம்முடைய மகத்தான குடியரசுக்கு புத்துயிர் கொடுக்கும் லட்சியத்தில் இந்த யாத்திரை வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்றார்.

கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் வழியாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் இந்த நடைப்பயணம் நிறைவடைந்தது. இந்த நடைப்பயணத்தில் மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,  ரா (RAW) உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலத், ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உட்பட பெரும் ஆளுமைகள், சாதாரண மக்கள், பல சாதனையாளர்கள், குழந்தைகள், பெரியவர்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொருளாதார வல்லுநர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து தனது 2 ஆம் கட்ட நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி குழுவில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இது குறித்து அறிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் வரும் ஜனவரி மாதம் 2வது வாரத்தில் ஒற்றுமை பயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி இந்த பயணத்தை குஜராத்தில் நிறைவு செய்கிறார் எனத் தெரித்துள்ளார். மேலும் நடைப்பயணம் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என காங்கிரஸ் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. 

சார்ந்த செய்திகள்