தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட மருந்துகளில் தவறான லேபிள்கள் ஒட்டப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளன. தமிழக அரசு முத்திரையுடன் தமிழகத்திலிருந்து ராஜஸ்தானுக்கு மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் அப்படி அனுப்பப்பட்ட மருந்து பாட்டில்களில் லேபிள்கள் மாற்றி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயங்களுக்கு பயன்படுத்தக்கூடிய ஆன்டிசெப்டிக் மருந்து பாட்டிலில் இருமல் சிரப் லேபிள்கள் ஒட்டி அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மருந்துகள் தற்போது மீண்டும் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட உள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் பி. உமாநாத் கூறுகையில், ' இந்த விஷயத்தில் மருந்தை உற்பத்தி செய்து விநியோகம் செய்த நிறுவனத்தின் மீதுதான் தவறு உள்ளது. ராஜஸ்தானுக்கு அனுப்ப வேண்டிய ஆன்டிசெப்டிக் மருந்து பாட்டில்களில், தமிழகத்திற்கு அனுப்ப வேண்டிய இருமல் மருந்தின் லேபிள்களை ஒட்டி அனுப்பியுள்ளனர். அதனால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் மருந்து பாட்டில்கள் ராஜஸ்தானில் இருந்து திருப்ப பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன' என கூறியுள்ளார்.