மேற்கு வங்க மாநிலத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து கட்சித் தாவல்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என அம்மாநில அரசியல் தினமும் பரப்பாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது. பாஜகவும், மம்தா பானர்ஜியும் தொடர் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் மேற்குவங்க அமைச்சர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது.
இந்தநிலையில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேர்தல் பிரச்சாரத்துக்காக 'மண்ணின் மகள்' அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது. இதன்மூலம் வெளியாட்களுக்கு மேற்கு வங்க அரசியலில் இடமில்லை என்ற வாதத்தை அக்கட்சி முன்வைக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தோடு "மண்ணின் மகளே, மேற்கு வங்கத்தின் விருப்பம்!" என்ற வார்த்தைகள் அடங்கிய போஸ்டர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது.
இதனையொட்டி கொல்கத்தா முழுவதும், மண்ணின் மகளே மேற்கு வங்கத்தின் விருப்பம் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள், கொல்கத்தா முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பார்த்தா சாட்டர்ஜி, கடந்த பல ஆண்டுகளாக, முதல்வராக தங்கள் பக்கத்தில் இருக்கும், தங்கள் சொந்த மகளை மாநில மக்கள் விரும்புகிறார்கள். மேற்கு வங்கத்தில் நடப்பவைகள் குறித்து வெளியாட்கள் தீர்மானிப்பதை நாங்கள் விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.