உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதனையடுத்து, தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அதில், 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதான கட்சிகளாக இருப்பது, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் தான். இந்த இரு கட்சிகளைத் தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணி முயற்சித்து வந்த நிலையில், இருகட்சிகளும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், பா.ஜ.கவின் சில முக்கிய திட்டங்கள் மீதான அதிருப்தியை ஜக்கிய ஜனதா தளம் நேற்று வெளியிட்டது.
இது தொடர்பாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி.தியாகி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நாட்டிலுள்ள எந்தக் கட்சியும் ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வேண்டாம் என்று கூறவில்லை. பீகார் பாதையைக் காட்டியது. அனைத்துக் கட்சிக் குழுவில் பிரதமரும் அதை எதிர்க்கவில்லை. ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது காலத்தின் தேவை. நாங்கள் அதைத் தொடர்வோம். நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவை பாஜகவுக்கு வழங்கியுள்ளோம். ஆனால், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். பிரிவினைக்குப் பிறகு பீகார் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை இந்தச் சமத்துவமின்மை தொடரும்.
அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தத் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது, அதன் விளைவு தேர்தலிலும் தெரிந்தது. அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஆயுதப்படைகளின் பெரும் பகுதியினரிடையே அதிருப்தி நிலவியது. அவர்களது குடும்பத்தினரும் தேர்தலின் போது எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, இது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இன்றும் பொது சிவில் குறித்த எங்களது நிலைப்பாடு அப்படியே உள்ளது. இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினரிடம் கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. பொது சிவில் சட்ட ஆணையத்தின் தலைவருக்கு நிதிஷ் குமார் கடிதம் எழுதி, நாங்கள் இதற்கு எதிரானவர்கள் அல்ல என்றும், ஆனால் இது குறித்து விரிவான விவாதம் தேவை என்றும் கூறியிருந்தார். இது குறித்து, அனைத்து முதல்வர்களுடனும் கலந்து பேசி ஒருங்கிணைந்த முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறினார்.