Skip to main content

“நான் சனாதனத்தை மதிக்கிறேன்; நம்பிக்கையைப் புண்படுத்தும் விதமாகப் பேசக்கூடாது” - மம்தா பானர்ஜி கருத்து

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

mm

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், 'சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். சினிமாவில் சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்த பொழுது கலைஞர் தான் 'எந்த காலத்திலடா பேசினாள் பராசக்தி' என வசனம் வைத்தார். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

 

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்'' என்றார். மீண்டும் தன்னுடைய பேச்சுக்கு விளக்கமளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது. எனது பேச்சை பாஜகவினர் திரித்துக் கூறுகின்றனர். என்ன வழக்கு போட்டாலும் அதை சந்திக்க நான் தயார்'' என்றார்.

 

nn

 

இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை நிலைப்பாடுகளை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின்  பேச்சுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'உதயநிதி ஒரு ஜூனியர். அவர் எந்த அடிப்படையில் இந்த கருத்தை கூறினார் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டு மக்கள் மீது தமக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. தமிழ்நாட்டு தலைவர்கள் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி நம்பிக்கை உள்ளது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. என்னைப் பொறுத்தவரை நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன். சனாதனம் வேதங்களில் இருந்து பிறந்தது. மக்களின் தெய்வ நம்பிக்கை அடிப்படையில் நாட்டில் எத்தனையோ கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் இருக்கிறது. ஒரு சாரார் நம்பிக்கையை புண்படுத்தும் விதமாகப் பேசக்கூடாது'' என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்