ஆஹா வந்திருச்சு, தென்னை மரமேற மெஷின்..! ஆனால் இங்கல்ல, அண்டை மாநிலமான கேரளாவில்தான் பாடுகிறார்கள் இப்படி. அந்த உபகரணங்கள் விரைவில் தமிழ்நாடு வரலாம். நினைத்தால் சாத்தியம்தானே. தமிழ்நாட்டின் டெல்டா, குமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தென்னந்தோப்புகள் அதிகம். தென்னம் பிள்ளை என்று தமிழ்நாட்டு மக்கள் தென்னையைப் பெற்ற பிள்ளைகளுக்கு ஒப்பீடு செய்வார்கள். அப்படி போற்றி வளர்க்கப்படுவது தென்னை. பத்து தென்னை மரங்கள் இருந்தால் ஒரு குடும்பம் பிழைக்கலாம். காரணம், மனித வாழ்வில் பக்தி முதல் அன்றாடம் உண்ணும் உணவு வரையிலும் தேங்காயின் பங்களிப்பு மிக அதிகம். பருப்பு இல்லாத சாம்பாரா என்று கிச்சன் தலைவிகள் சொல்லுவதைப் போல, தேங்காய் இல்லாத உணவா என்றாகிவிட்டது பிரபஞ்சத்தில். அதுபோன்று மனித வாழ்வில் ஒன்றிப் போனது தென்னை.
இதர மாவட்டங்கள் மட்டுமல்லாமல், குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர், காசிதர்மம், நெடுவயல், அச்சன்புதூர், வடகரை, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட ஆற்றுப்பகுதிகளில் ஆதிகாலம் தொட்டே தென்னை மரங்களடங்கிய தென்னந்தோப்புகள் மிக அதிகம். மட்டுமல்ல, அந்த டிவிஷன்களில் தென்னந்தோப்புகள் முக்கியமான விவசாயத் தொழிலாகவே நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் தேங்காய் பலன் தரக்கூடிய நேரத்தில், ஆயிரக்கணக்கில் விளைந்திருக்கும் தேங்காய்களைத் தென்னை ஏறி பறித்துத் தள்ளுவதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. இதையே தொழிலாகக் கொண்ட தென்னைமரத் தேங்காய் பறிப்புத் தொழிலாளிகள், பறிப்பு சீசன் காலங்களில் மாநிலம் முழுக்கச் சென்று தேங்காய் பறிப்பில் ஈடுபடுவர். காலச்சூழல் காரணமாக தமிழ்நாட்டில் தேங்காய் பறிப்புத் தொழிலாளிகளின் கூலியும் கணிசமாக உயர்ந்துவிட்டதால், வேறு வழியின்றி தென்னை ஏறும் தொழிலாளர்களுக்குக் கூலி தர வேண்டிய சூழல் மட்டுமல்ல, தென்னை ஏறும் தொழிலாளிகளும் இதில் சிரமங்களையும் உடல் வலியையும் சந்திக்க வேண்டிய கட்டாயம். ஏறும்போது நெஞ்சு உரசி காயமும் ஏற்படுவதோடு ஏறும்போது கரணம் தப்பினால் மரணம்தான் என்பது தவிர்க்க முடியாதது.
இதே போன்றதொரு, நிலவரம்தான் மாநிலம் முழுக்க. தென்னை மரங்களை ஆதாரமாகக் கொண்ட கேரளாவில், இதர மாநிலங்களைப் போலன்றி தென்னை மரங்களைத் தெய்வத்திற்கு ஒப்பாகவே வைத்திருக்கிறார்கள் மலையாளிகள். கேரளாவில் திரும்பிய இடமெல்லாம் தென்படும் தென்னைக் கூட்டம்தான் ஆரம்ப காலங்களில் அம்மாநிலத்தின் பிழைப்பின் ஆதாரம். பண்டைய காலங்களில் தென்னை மரத்திற்குக் கேர விருட்சம் என்று பெயர் இருந்ததன் காரணமாக, கேரளம் என்பது தென்னையின் உயிர் என்கிறார்கள் கொல்லம் நகரவாசிகள். ஆக கேரளா என்ற பெயர் தென்னை மரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதாகத் தெரிகிறது.
காலநிலை மாற்றம், டிஜிட்டல் உலகம் என்றான நிலையில் தற்போது கேரளாவில் முன்னெப்போதுமில்லாமல் தென்னை ஏறித் தேங்காய் பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்காமல் திண்டாட்டமாகியிருக்கிறது. அப்படியே பறிப்பு ஆட்கள் கிடைத்தாலும் கூலியோ உச்சம். மிகவும் நெருக்கடியான காலகட்டம். தவிப்பில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில்தான் தென்னை ஏறுகிற உபகரணம் அறிமுகமாகி சக்கை போடு போடுகிறதாம். அந்த உபகரணங்கள் மூலம் எத்தனை பெரிய தென்னை மரம் என்றாலும், புதிய நபர் கூட மிகச் சுளுவாக பத்தே நிமிடத்தில் தென்னை மரமேறிவிடலாம். அத்தனை அதிசயம். தற்போது கேரளாவில் தென்னந்தோப்பு அதிபர்களிடையே வரப்பிரசாதமாகப் பார்க்கப்படும் பொருளாகிவிட்டது என்கிறார்கள்.
கேரளாவின் கொல்லம் தாழவா பகுதியைச் சேர்ந்த விலு மற்றும் வினோத் சகோதரர்கள் ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் ராணுவத்தினர். தற்போது வங்கியில் வேலை பார்த்தாலும் இவர்கள்தான் இந்த மரம் ஏறும் உபகரணங்களை அறிமுகப்படுத்தியவர்கள். 9 பேர்களைக் கொண்ட தேங்காய் பாய்ஸ் என்ற அமைப்பைக் கொண்டவர்கள். இதில் 2 பேர் மலையாளிகள், 7 பேர் பெங்காலிகள். இதன்மூலம் இந்த மெஷினைக் கொண்டு தென்னை மரமேறுவதைக் கொல்லம் மற்றும் ஆலப்புழை மாவட்டங்களில் பயிற்சி கொடுத்துவருகிறார்கள்.
“கேரளாவில் தென்னை மரமேற ஆட்களில்லை. இருக்கப்பட்டவர்ளோ அதிக கூலி கேட்கிறார்கள். இந்தநிலையில்தான் இந்த டூல்ஸை அறிமுகப்படுத்தினோம். இதற்கு கேரளாவில் நல்ல வரவேற்பு. திருவனந்தபுரத்தில் இந்த டூல்ஸைக் கொண்டு பெண்கள் கூட தென்னை மரம் ஏறுகிறார்கள். இங்கே இது ரொம்ப ஹெல்ப் ஃபுல்லாக இருக்கிறது” என்கிறார் வினோத்.
இங்கேயும் இறக்குமதியாகுமா தென்னை மர மெஷின். காலம்தான் பதில் தர வேண்டும்.