இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 12 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் உயிரிழப்பதை விட அப்பாவி பாலஸ்தீன மக்கள் அதிகளவில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சில தினங்களுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத்பவார் கூறுகையில், “உலகில் அமைதியை விரும்புகிறோம். இப்போது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த நிலம், இடம் முழுவதும் பாலஸ்தீனத்துக்கு உடையது. பின்னர் இஸ்ரேல் அதை கைப்பற்றியது. அதன் பிறகு தான் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர்கள் அனைவரும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சனையில் ஒரே மாதிரியான எண்ணங்களை கொண்டிருந்தனர். அதுதான் இந்தியாவினுடைய நிலைப்பாடாக இருந்தது. இந்தியா எப்போதும், அந்த நிலத்தின் சொந்தக்காரர்களான பாலஸ்தீனத்தின் பக்கம் தான் நின்றது. ஆனால், முதல் முறையாக நமது பிரதமர் மோடி இஸ்ரேலுடன் நிற்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாக இருக்கிறது. எனவே, அந்த நிலத்தை சேர்ந்த மக்களுக்காக நாங்கள் துணையாக இருக்கிறோம்” என்று கூறினார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஒரு மூத்த தலைவர் இப்படி கருத்து கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது என்று கூறியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து சரத்பவார் போன்ற மூத்த தலைவர்கள் இப்படி அபத்தமாக பேசுவது மிகவும் கவலை அளிக்கிறது. பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் எந்த பகுதியில் நடந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும். இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், பல முறை முதலமைச்சராகவும் பதவி வகித்தவர் பயங்கரவாதம் தொடர்பான விஷயங்களில் இப்படி சாதாரண பார்வை கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற மனநிலையை நிறுத்த வேண்டும். சரத்பவார் இப்போது தேசத்தைப் பற்றி முதலில் நினைப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.