நாட்டில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அதன்படி புழக்கத்தில் இருந்த 3.42 லட்சம் கோடி மதிப்பிலான 96 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவது தொடர்பாக அதிரடி அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பின் படி, “2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 முதல் ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரூ.2000 நோட்டை மாற்றுவதற்கான கால அவகாசம் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், ரூ.2000 நோட்டை வங்கிகளில் மாற்ற இன்றே கடைசி நாளாகும். இன்றுக்குள் வங்கிகளில் ரூ.2000 நோட்டை மாற்ற முடியாதவர்கள், நாளை முதல் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.20,000 வரை ரூ.2000 நோட்டை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 19 கிளைகளில் தனிநபரோ, நிறுவனமோ ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
முன்னதாக புழக்கத்தில் இருந்த அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் சட்டப்பூர்வ டெண்டர் நிலையைத் திரும்பப் பெற்ற பிறகு, பொருளாதாரத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக, 1934 ஆம் ஆண்டு ஆர்பிஐ சட்டத்தின் பிரிவு 24(1) இன் கீழ் ரூ. 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில். 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் மற்ற வகைகளில் உள்ள ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன் நிறைவேற்றப்பட்டது. அதனால், 2018-19ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.