மேற்குவங்கம், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக இருந்த 29 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், மூன்று மக்களவை தொகுதிகளுக்கும் அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தநிலையில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும் பல்வேறு தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்குவங்கத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், நான்கையும் திரிணாமூல் காங்கிரஸ் வென்றுள்ளது. நான்கு தொகுதிகளிலும் பாஜக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
மேகாலயா மாநிலத்தில் மூன்று தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், தேசிய மக்கள் கட்சி 2 இடத்திலும், ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ஒரு இடத்திலும் வென்றுள்ளது. கர்நாடகாவில் இரண்டு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 1 இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஒரு தொகுதியில் காங்கிரஸ் வென்றுள்ளது. அந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். பாஜக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மற்றொரு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
மிசோராமில் ஒரு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், மிசோ தேசிய முன்னணி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றுள்ளது. பீகாரில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், ஒரு தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது.