அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்து, முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்தநிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் காயமடைந்த டிரம்ப் பாதுகாப்பு அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான நபரை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் டிரம்ப் உயிர் தப்பியுள்ளதால் இடதுசாரிகள் அவநம்பிக்கை அடைந்துள்ளனர் என நடிகையும், நாடாளுமன்ற எம்.பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “டிரம்ப் பேசிக்கொண்டிருக்கும் போதே சுடப்பட்டார். ஆனால் கொலை முயற்சியில் இருந்து டிரம்ப் தப்பியதால் இடதுசாரிகள் அவநம்பிக்கை அடைந்துள்ளனர். அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
கிட்டத்தட்ட 80 வயதாகும் டிரம்ப் தன் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தும் ‘அமெரிக்கா வாழ்க’ என்று கோஷமிடுகிறார். எப்போது வலதுசாரிகள் சண்டையை தொடங்குவதில்லை. முடிவுகட்டவே நினைக்கின்றனர். டிரம்பின் மார்பில் தோட்டாக்கள் பாய்ந்தது. ஆனால் அவர் மட்டும் புல்லட் புரூப் ஜாக்கெட் அணியாமல் இருந்திருந்தால் டிரம்ப் உயிர்பிழைத்திருக்க மாட்டார். இடதுசாரிகள் அடிப்படையில் அமைதி, அன்பை நம்புகிறார்கள்; ஆனால் டிரம்பை கொலை செய்ய முயல்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.