நான் ஆடுவதை பார்க்கவும் தவறுகளை திருத்திக் கொள்ளவும் வீட்டில் ஒரு கண்ணாடிகூட இல்லை. எனது நிழலின் அசைவுகளைப் பார்த்தே டான்ஸை திருத்திக் கொண்டேன் என்கிறார் யுவராஜ் சிங்.
டிக் டாக் ஆப்பை பயன்படுத்தி டான்ஸ் வீடியோக்கள் வெளியிட்டவர் ஜோத்பூரை சேர்ந்த யுவராஜ்.
“ஆரம்பத்தில் எனது டிக் டாக் வீடியோக்களை மிகச் சிலரே பார்த்தார்கள். நான் எதைப்பற்றியும் கவலைப்படாமல் டான்ஸ் பயிற்சிக்காகவே வீடியோக்களை பதிவிட்டேன். அப்போதெல்லாம் வீட்டில் நான் பயிற்சி பெறவோ, எனது நடனத்தை பார்க்கவோ கண்ணாடிகூட இல்லை. எனது நிழலைத்தான் பார்த்து ஆடுவேன்.
யு டியூப்பில் நடனங்களைப் பார்த்தே நான் ஆடப்பழகினேன். எனது வீடியோக்கள் வைரலான பிறகு ஒரு நாள் டெல்லியைச் சேர்ந்த நடனக்குழுவின் இயக்குநர் ஹர்பீத் என்னை அழைத்து தனது குழுவில் சேர்த்துக் கொண்டார்” என்று பழைய நினைவுகளைக் கூறுகிறார் யுவராஜ்.
இந்திய அளவில் இன்னொரு மைக்கேல் ஜாக்ஸனாக உருவெடுத்திருக்கும் யுவராஜ் சிங், ஹ்ரித்திக் ரோஷனை தனக்கு மிகவும் பிடிக்கும். மைக்கேல் ஜாக்ஸனைப் போல ஆட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்கிறார். இவர் ஆடும்போது காற்றில் மிதப்பதைப் போல இவருடைய கால்கள் ஒரு மாயஜாலத்தை செய்கிறது. இதை ரசித்த ஹ்ரித்திக் ரோஷன், யுவராஜின் நடனக் கிளிப்புகளில் சிலவற்றை தொகுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றினார். அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் இந்திய அளவில் வைரலாகி இருக்கிறார்.