இந்திய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய இரண்டு நாட்களிலும், மணிப்பூர் கலவரம் மற்றும் இரு பெண்களை ஆடைகளை அகற்றி சாலையில் இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாகவும், மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும் உடனடியாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது.
குறிப்பாக, குறுகிய நேரம் மட்டுமே விவாதிக்க அனுமதி அளிக்கப்படும் என சபாநாயகர் கூறியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் அவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து பதில் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனால் நாடாளுமன்றம் துவங்கி நடைபெற்ற இரண்டு நாட்களும், ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்றைய நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு வந்த ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சாதா, பிரதமர் மோடி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி பதிவிட்ட ட்விட்டர் பதிவின் நகலைக் கையில் வைத்து நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டம் நடத்தினார்.
அவர் கையில் வைத்திருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பழைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; “மாநிலத்தில் அமைதியை உறுதிப்படுத்த முடியாதவர்களுக்கு மணிப்பூரை ஆட்சி செய்ய உரிமை இல்லை” என இருந்தது. அந்தச் சமயத்தில் அந்த மாநிலத்தில் ஒக்ராம் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது.
தற்போது மணிப்பூரில் பாஜக தலைமையிலான, முதலமைச்சர் பிரேன் சிங் ஆட்சி நடைபெற்று வருகிறது. உலகையே உலுக்கிய மணிப்பூர் காணொளி வெளியானதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள், மணிப்பூரில் மாநில ஆட்சியைப் பதவி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.