Published on 28/08/2019 | Edited on 28/08/2019
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, 20 நாட்களுக்கும் மேலாக அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. காஷ்மீர் அரசியல் தலைவர்கள் பலரும் இன்னும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஜம்மு பகுதியின் ரஜௌரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதிர் கோலி மற்றும் அவரது உறவினரான மன்சூர் அகமது கோலி ஆகியோரை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கடந்த 18ஆம் தேதி இரவு கடத்தினர். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இந்த இருவரும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அப்துல் காதர் மற்றும் மன்சூர் அகமது ஆகியோரின் சடலங்கள் டிரால் வனப்பகுதியில் மீட்கப்பட்டன. கடத்திச்சென்ற பயங்கரவாதிகள் அவர்கள் 2 பேரையும் சுட்டுக்கொலை செய்து, உடல்களை வீசிச் சென்றது தெரிய வந்துள்ளது. இது அந்தப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருவரையும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளது தெரியவந்தது. இந்த கொலைகளை செய்தது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்னும் பயங்கரவாத அமைப்பு தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த நிலையில் நடந்துள்ள முதல் பயங்கரவாத தாக்குதல் இதுதான் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதனால் புல்வாமா பகுதியில் பதற்றமான நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.