இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் ஆக்சிஜனுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் நேற்று (20.07.2021) நாடாளுமன்றத்தில், "இரண்டாவது அலையில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான கரோனா நோயாளிகள் சாலைகளிலும் மருத்துவமனைகளிலும் இறந்தனர் என்பது உண்மையா?" என கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார், "கரோனா இறப்புகளைத் தெரிவிப்பதற்காக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தால் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன. அதன்படி அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கரோனா பாதிப்புகள் மற்றும் மரணங்கள் குறித்து மத்திய அரசுக்குத் தொடர்ந்து தெரிவித்துவந்தன. இருப்பினும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்தவொரு மரணமும் ஏற்பட்டதாக மாநிலங்களோ யூனியன் பிரதேசங்களோ தெரிவிக்கவில்லை" என தெரிவித்தார்.
இதற்கு சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்தநிலையில், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம், ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து மத்திய அரசு அளித்த பதில் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "அவர்கள் (மத்திய அரசு) விரைவில் கரோனாவே இல்லையென்று கூறுவார்கள். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றால், மருத்துவமனைகள் ஏன் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சென்றன? இது (மத்திய அரசின் பதில்) முற்றிலும் தவறானது" என கூறியுள்ளார்.