ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில், பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் அருகே இன்று (20-12-24) அதிகாலை நேரத்தில் ரசாயணம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, மற்றொரு வாகனத்தின் மீது மோதியது. இதனால், லாரி தீ பிடித்து எரிந்தது. ரசாயணம் ஏற்றிச் சென்ற லாரியில் பிடித்த தீ, கொஞ்சமாக கொஞ்சமாக அருகில் இருந்த வாகனங்கள் மீது பரவியுள்ளது.
இந்த பயங்கர தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது. மேலும், பலருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், வாகனங்களில் பிடித்த தீயை அணைக்க போராடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு, தீயை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில், 9 பேர் உயிரிழந்ததாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும், 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் பங்கில் இருந்து ரசாயணம் ஏற்றிச் சென்ற லாரி, மற்றொரு வாகனம் மீது மோதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தை உலுக்கியுள்ளது.