பாலா இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷிணி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இப்படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பாலாவின் 25ஆம் ஆண்டு திரைப்பயணம், இரண்டு நிகழ்வும் ஒரே நிகழ்வாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் வசந்த பாலன், கருணாஸ், ஜீ.வி.பிரகாஷ், சீனு ராமசாமி, விஜயகுமார், மாரி செல்வராஜ், மன்சூர் அலிகான், சிங்கம் புலி, நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான், மிஷ்கின், நித்திலன் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பாலாவை வாழ்த்தினர். மேலும் சூர்யா, சிவக்குமார், சிவகார்த்திகேயன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசுகையில், “வணங்கான் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும். அருண் விஜய்க்கு ஆல் தி பெஸ்ட். இன்னொரு தலைமுறை இந்தப் படத்தைப் பார்த்து நிறைய கற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து பாலா குறித்து பேசிய சூர்யா, “நந்தா இல்லாவிட்டால், காக்க காக்க உருவாகியிருக்காது. காக்க காக்க உருவாகவில்லை என்றால் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகியிருக்காது. என்னைக் கண்டுபிடித்து தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய திறமைசாலியாக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பாலா சார். அவர் என்னை உரிமையோடு திட்டுவார். உறவுகளில் உரிமை எடுத்துகொள்வார்கள். என்னுடைய குடும்பத்தையும் பாலா அப்படித்தான் பார்ப்பார். எங்களுடைய இன்ப துன்பங்கள் நேரத்தில் கூட உடன் இருப்பார். அடிக்கடி பேசிக்கமாட்டோம். இருந்தாலும் நான் எப்போது சந்தோஷப்படுவேன் என அவருக்கு தெரியும். துக்கப்படுவேன் என அவருக்கு தெரியும். அப்போது ஒரு வாய்ஸ் மெசெஜ் அனுப்புவார். அந்த ஒரு வார்த்தை போதும். அது நம்மை எங்கேயோ கூட்டிப் போய்விடும்” என்றார்.
சூர்யாவின் ஆரம்பக்கட்ட திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது பாலா இயக்கிய நந்தா, பிதாமகன். இந்த வெற்றி கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு வணங்கான் படத்தில் இணைந்தது. ஆனால் சூர்யா சில காரணங்களால் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.