‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க. செய்தி தொடர்பாளர் மதிவாணன், அண்மையில் நடந்த அ.தி.மு.க. செற்குழு - பொதுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
பொதுக்குழு நடத்தியதற்காக பழனிசாமி என்ன வேண்டுமானாலும் பேசி விடுவரா? தெளிவான கருத்தின் அடிப்படையில் அவர் பேச வேண்டும். எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மழை வெள்ளத்தின் போது மக்களைச் சந்திக்க போனார்களா? சி.வி.சண்முகம் ஸ்கோர் செய்துவிடுவார் என்பதற்காக விழுப்புரத்திற்கு பழனிச்சாமி போனார். இதுதான் யதார்த்த உண்மை. ஏன் மற்ற பகுதிகளுக்கு சென்று மக்களைச் சந்திக்கவில்லை. களத்தில் வந்து நிற்காத எதிர்க்கட்சி தலைவருக்கு மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா? எதற்காக அ.தி.மு.க.-விற்கு மக்கள் ஓட்டுப் போடவேண்டும். நான்கு வருட ஆட்சியில் எதிர்க்கட்சியாக மக்களுக்கு அ.தி.மு.க. என்ன செய்தார்கள்? சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரைச் சொல்லிக் கண்டிக்கிறார்கள். ஆனால் மோடி என்ற வார்த்தையைக்கூட உச்சரிக்க மறுக்கிறார்கள். என்ன மோடிக்கு தடவிக் கொடுக்கிறார்களா? மக்கள் தொடர்சியாக கொடுத்த தோல்வியைவிட வேறு என்ன பரிசு அ.தி.மு.க.-விற்கு வேண்டும்.
மக்களுக்குத் தேவையான திட்டத்தை தி.மு.க. செய்யும்போது, தி.மு.க-வுடன்தான் மக்கள் இருப்பார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி சிந்தித்துப் பேச வேண்டும். மக்கள் அ.தி.மு.க. மேல்தான் வெறுப்பில் உள்ளனர். அதனால்தான் தி.மு.க. தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி கடந்த இடை, சட்டமன்ற, மக்களவை தேர்தல்களைத்தான் ஒப்பிட்டு வாக்கு எண்ணிக்கைகளைப் பற்றியும் கூட்டணிக் கட்சி வாக்குகளையும் பற்றியும் பேச வேண்டும். ஆனால் அரசியல் புரிதல் இல்லாமல் அதற்கு முன்பு நடந்த தேர்தலை ஒப்பிட்டு பேசியிருக்கிறார். அவருக்குப் புள்ளி விபரமும் தெரியாது, ஒன்றும் தெரியாது. யாரோ எழுதிக் கொடுத்ததைப் பேசுவது என்ன மாதிரியான கணக்கு என்று தெரியவில்லை. அவர் சொன்ன தரவுகள் அத்தனையும் பொய். அப்படிப்பார்த்தால் 2019ஆம் ஆண்டு தி.மு.க. வாங்கிய வாக்குகளைவிட இன்றைக்கு அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. வெற்றி முக்கியமா? வாக்கு சதவிகிதம் முக்கியமா?
2021 சட்டமன்றத் தேர்தலில் ஒரு லட்சத்துத் தொண்ணூறு ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றோம் இல்லையென்றால் வெற்றி பெற்றிருப்போம் என்று பழனிசாமி பேசுகிறார். அந்த வாக்குகளை வாங்கியிருந்தாலும் அவரால் வெற்றி பெற்றிருக்க முடியாது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மூன்று மாவட்டத்தில் அ.தி.மு.க.-வால் வெற்றி பெற முடிந்ததா? தென் மாவட்டங்களில் எத்தனை தொகுதி வெற்றி பெற்றார்கள்? அவர்கள் சொல்லும் அந்த வாக்கு சதவிகிதம் சாதிய ரீதியாக மக்களை நம்ப வைத்து வாங்கினது. அது 2021ஆம் ஆண்டே முடிந்துவிட்டது. இப்போது மக்களவைத் தேர்தலில் மக்கள் தி.மு.க. உடன் நிற்கிறார்கள். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மேகா கூட்டணி அமைப்போம் என்று அவர் பேசியிருக்கிறார். யார் வருவார்கள் அவருடன் கூட்டணிக்கு? எடப்பாடி பழனிசாமி மரத்தடியில் உட்கார்ந்து கிளி ஜோசியம்தான் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில்தான் அவர் இவ்வளவு பேசுகிறார். அடுத்தமுறை அதையும் இல்லாமல் ஆக்கிவிடுவோம். அதோடு அவருக்கு கதை முடிந்தது என்றார்.