நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது,பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரைக் காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பா.ஜ.க மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி பேச வேண்டும்” என்று பேசினார்.
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமித்ஷா பேசிய கருத்துக்கு எதிராக, கர்நாடகா காங்கிரஸ் உறுப்பினர்கள் கர்நாடகா மாநில சட்ட மேலவையில் கண்டனம் தெரிவித்து அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி போராட்டம் நடத்தினர். இதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போராட்டத்தின் போது, பா.ஜ.க எம்.எல்.சி சி.டி.ரவிக்கும், கர்நாடகா அமைச்சர் லட்சும் ஹெப்பால்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கு எதிராக சி.டி.ரவி தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், சி.டி.ரவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டப்பேரவை சபாநாயகரிடம், காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சி.டி.ரவியை நேற்று (19-12-24) இரவு கைது செய்தனர். இதனிடையே வீடியோ மூலம் செய்தி வெளியிட்ட சி.டி.ரவி, ‘என்னை சுமார் 8 மணி போல், கானாபுரா காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். ஆனால், எதற்காக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்ற எந்த விவரத்தையும் அவர்கள் அளிக்கவில்லை. போலீசார் என்னுடைய புகாரை பதிவு செய்யவில்லை. எனக்கு எதாவது நேர்ந்தால் அதற்கு காங்கிரஸ் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். பொய் வழக்கு பதிவு செய்து என்னை கொலை செய்ய சதி செய்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.